வக்பு திருத்​தச் சட்​டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: தமிழக அரசுக்கு ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்

0
109

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலம் உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு நடத்தி வருகிறது. ஆனால், இன்று வரையும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறும் திமுக அரசு, கேரளத்தை போல தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆதரவாக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முதல்வரை வலியுறுத்த வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இந்த விவகாரத்தை தவெக வாக்கு வங்கிரீதியாக அணுகவில்லை. கட்சிரீதியாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை விட மாநில அரசு எடுத்துரைக்கும்போது வலுவான வாதத்தை முன்வைக்க முடியும். இதை விவாத பொருளாக மாற்றவிருக்கிறோம்.

மாநில சுயாட்சிக்கு ஆதரவாக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் முதல்வர் ஸ்டாலின், வக்பு சட்டத்துக்கு எதிராக ஏன் எழுதவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதையும் வரவேற்கிறோம். ஆனால், பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தவெகவின் நோக்கம்.

வடகாடு விவகாரத்தில் தவெக ஆய்வு செய்து அறிக்கை பெற்றுள்ளோம். சாதிரீதியான பிரச்சினைகளை தீர்க்க அரசு அதிகாரிகள் தயாராக இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அரசு செயல்படாமல் இருக்கிறது தெளிவாகிறது.

பொள்ளாச்சி விவகாரத்தில் திமுக அரசு விளம்பரம் தேடிக் கொண்டது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உயர் நீதிமன்றம்தான் குழு அமைத்தது. இவ்வாறு உயர் நீதிமன்றம்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. வேங்கைவயல் பிரச்சினை தீவிரமாகும்போது, விசிக தலைவர் செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. இதைத்தான் கேள்வியாக முன்வைத்தேன்.

சமூகநீதிக்கான அரசுதான் திமுக அரசு என விசிக தலைவர் திருமாவளவன் குரல் கொடுப்பதை நிறுத்த வேண்டும். வன்னியர் சங்க மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கும் அரசு, பிரச்சினைகளை கூறுவதற்கான ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிப்பதில்லை. அண்மையில் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்த அதிமுகவை தவெக ஏன் எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here