பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவே செயல்பட்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.
மதுரையில் நாளை தொடங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு நேற்று விமானத்தில் வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி. ஆர்எஸ்எஸ் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சியாக பாஜக உள்ளது. பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்காகச் செயல்படும் அரசை நடத்தும் கட்சியாக அது திகழ்கிறது. இந்தப் பின்னணியில் கல்விக் கொள்கையின் பெயரில் இந்தியக் கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்க்கும் வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது.
தமிழக முதல்வர் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளில் முன்மாதிரியாகச் செயல்படுகிறார். இந்திய ஒற்றுமை காக்கப்பட வேண்டும். மாநில உரிமைகள், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம்.
பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவே செயல்பட்டு வருகிறார். பிரதமர் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது வியப்புக்குரிய செயல் இல்லை. பாஜகவை ஆர்எஸ்எஸ் ஆட்டிப்படைக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தையே ஏற்றுக்கொள்ளாத ஓர் இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல், நாட்டை மதவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றவர். ஆனால் அவர் அதுபோல் நடந்து கொள்வதில்லை. சத்தீஸ்கர் மாநிலப் மலைப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகளைத் துரத்தி அடித்துவிட்டால் அங்கு இருக்கக்கூடிய கனிம வளங்களை எல்லாம் பெரு நிறுவன முதலாளிகளுக்குக் கொடுத்து விடலாம் என்ற நோக்கத்தில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாட்டைக் காப்பாற்ற மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுவோருக்கு இடது சாரிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.