விவசாயிகளின் குறை தீர்க்க விரைவில் நிரந்தர கமிட்டி அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம்பஞ்சாப்-ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் முற்றுகையிட்ட விவசாயிகளை முடக்க ஷம்பு எல்லையை ஹரியாணா அரசு மூடியது. ஆனால், சற்றும் பின்வாங்காமல் தங்களது டிராக்டர்கள் மற்றும் புல்டோசர்களை நெடுஞ்சாலைகளிலேயே நிறுத்தி வைத்து போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர்.மேலும், ஹரியாணா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷம்பு எல்லையை திறக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக ஹரியாணா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கி அமர்வு முன்பு நேற்று இந்தவழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து சுமுகமான முறையில் அவர்களது குறை தீர்க்க பல்வேறு உறுப்பினர்கள் கொண்டு நிரந்தர கமிட்டி விரைவில் அமைக்கப்படும். விவசாயிகள் தொடர்பான தற்காலிக சிக்கல்கள் குறித்த தகவல்களை பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசுகள் இந்த கமிட்டியிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்படுகிறது. அடுத்த விசாரணை வரும் செப். 2-ம் தேதி நடைபெறும். இவ்வாறு தெரிவித்தனர்.