பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை, குற்றியாறு, மைலார், மணியங்குழி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: – பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை – குற்றியாறு வனப்பகுதிக்குள் கி.மீ 0/4-ல் ஏற்கனவே அமைந்துள்ள தரைப்பாலம் 31.45 மீட்டர் நீளமுடையது.
இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாலும் மழைக்காலங்களில் வெள்ளம் வடிய ஒரு வாரகாலத்திற்கு மேல் ஆவதாலும் இதனால் இப்பகுதி மக்களுக்கு வேறு மாற்றுப்பாதை இல்லாததாலும் இத்தரைப்பாலத்தினை 16.6 மீட்டர் நீளத்தில் மூன்று கண்கள் கொண்ட உயர்மட்ட பாலமாக மாற்ற ரூ.5 கோடி மதிப்பில் 30 சதவீத பணிகள் முடிவுற்று, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.