ஒடிசா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்ட 2 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவின் பீரம்பூர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி வருபவர் கீதாஞ்சலி தாஸ். இவரிடம் அமலாக்கத் துறையில் இருந்து பேசுவதாக கூறி இரண்டு பேர் அறிமுகமாகினர். பின்னர், கீதாஞ்சலி தாஸ் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை பிப்ரவரி 14 முதல் 22 வரை டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்திருப்பதாக கூறி விசாரணை முன்னுரிமைக்காக ரூ.14 லட்சத்தை டெபாசிட் செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளனர். இதை நம்பி துணை வேந்தரும் பணத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் ரூ.80,000-த்தை மட்டும் துணைவேந்தருக்கு திருப்பி அளித்த அந்த நபர்கள், மீதப் பணத்தை சரிபார்த்தபிறகு தருவதாக அவரிடம் உறுதி அளித்தனர். பணம் திரும்பி வராததையடுத்து தாஸ் போலீசில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்ட இருவர் குஜராத்தின் பாவ்நகரில் கடந்த வாரம் பிடிபட்டனர்.
பூட்டையா ஜெனில் ஜெய்சுக்பாய் (23) மற்றும் விஸ்வஜீத்சிங் கோஹில் (21) ஆகிய இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.