நித்திரவிளை அருகே தெருவுமுக்கு – வைக்கல்லூர் மாநில நெடுஞ்சாலையில் குடப்பள்ளி என்ற இடத்தில் பழைய பழமையான மகாகனி மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் சாலையில் சாய்ந்த நிலையில் அந்த மரத்தின் கிளைகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மேல் பகுதிகளில் பரவியுள்ளன, ஆபத்தான நிலையிலும் காணப்படுகிறது.
இதனால் இந்த வழியாக வைக்கல்லூர், கலிங்கராஜபுரம், சமத்துவபுரம், பூத்துறை, இரயுமன் துறை போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் சாலை வழியாக செல்லும் போது பேருந்தின் மேல் பகுதி மரத்தில் உரசும் நிலையில் காணப்படுகிறது. அவ்வாறு மரத்தில் உரசாமல் இருக்க வாகன ஓட்டுனர்கள் சாலையின் வலது பக்கம் வழியாக பேருந்தை கொண்டு செல்லும் போது, அந்தப் பகுதி வளைவான பகுதி என்பதால் எதிர் திசையில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன.
இருசக்கர வாகனங்கள் வரும்போதும் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இனி வரும் இரண்டு மாதங்களில் தென்மேற்கு பருவ மழை காலம் என்பதால் காற்று காரணமாக மரம் சாய்ந்து வீடுகளின் மேல் விழ வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என்று அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.