தேசிய விருது பிரிவுகளில் இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர்கள் நீக்கம்

0
571

தேசிய திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக இருந்த சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஆகிய பிரிவுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தேசிய விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளை சீரமைப்பதற்கான குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையில் பேரில், 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி , ‘சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது’ என்ற பெயரில் இருந்த பிரிவு, ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ என்று மாற்றப்பட்டுள்ளது. அதே போல ‘தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது’ என்ற பிரிவு, ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ பெறும் இயக்குநருக்கு பதக்கமும், ரூ.3 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ விருது பெறும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். மேலும், இந்திய திரைத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here