கடந்த 2004-ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் ‘கம்பீரம்’ படத்தின் காமெடி காட்சியில் ரெய்டு செல்லும் வடிவேலு உடைகள் களையப்பட்டு மூலையில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை உற்றுநோக்குபவரிடம், ‘அவனா நீ’ என ஒருவித நக்கல் தொனியுடன் கேட்பார் வடிவேலு. இந்தக் காட்சியைப் பார்த்து சிரிக்காதவர்கள் இல்லை. இதன் எதிரொலி சமூகத்திலும் பிரதிபலித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பால்புதுமையினரை தமிழ் சினிமா ‘அவனா நீ’ என கேலி கிண்டலுடன் அணுகியிருக்கிறது. பெரும்பாலானா படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
விக்ரம் – ஷங்கர் கூட்டணியில் உருவான ‘ஐ’ படத்தில் வரும் ஓஸ்மா ஜாஸ்மின் கதாபாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். போலவே, விக்ரமின் ‘இருமுகன்’ பட வில்லன் கதாபாத்திரமும். பெரிதும் வரவேற்ப்புக்குள்ளான கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் ‘அமுதன் – இளமாறன்’ வில்லன்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள்.
அதாவது, தன்பால் ஈர்ப்பாளர்களை கேலிக் கதாபாத்திரங்களாகவும், வில்லன்களாகவும் சித்தரித்திருக்கும் தமிழ் சினிமா 2023-லும் கூட அதிலிருந்து விடுபடவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கவுரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலுமே ‘அவனா நீ’ என்ற வார்த்தை பிரயோகம் அவரை நோக்கி எழுப்பபட்டிருக்கும். ‘கம்பீரம்’ முதல் ‘மார்க் ஆண்டனி’ வரை இன்றும் அந்த அவலம் தொடர்கிறது. இதை காமெடியாக நினைத்து எழுதியவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி, அவ்வளவு வன்மும், வறட்சியுமானதா உங்களின் நகைச்சுவை எழுத்து?
களம் மாற்றிய கோவா: இந்த மோசமான புரிதலுக்கு இடையே 2010-ல் வெளியான ‘கோவா’ படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களை வெங்கட்பிரபு அணுகியிருந்த விதம் கவனிக்க வைத்தது. நடிகர் சம்பத் ‘டேனியல்’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முடிந்த அளவுக்கு டேனியலை கூட்டத்தில் ஒருவராக இயல்பானவராக காட்டியிருப்பார் வெங்கட்பிரபு. அங்கே இவர்களின் ‘அவனா நீ’ போன்ற கொச்சைபடுத்ததுல் இருக்காது. தனித்து பார்க்கும் பார்வைகள் இருக்காது. முகம் சுளிக்கும் காட்சிகள் இருக்காது. நண்பர்களுக்குள் ஒருவராக சாமி கண்ணு (பிரேம்ஜி) மீது அன்பு கொண்ட கதாபாத்திரமாக கண்ணியமாக காட்சிப்படுத்தப்படிருப்பார் டேனியல். இதில் பொசசிவாகும் ஜாக் (அரவிந்த் ஆகாஷ்) மூலம், தன்பால் ஈர்ப்பாளர்களிடையேயான அன்பை தீட்டியிருப்பார் வெங்கட்பிரபு.
“கோவா படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து பேசியதற்கு பலரும் என்னை பாராட்டினார்கள். பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். கிராமத்திலிருந்து வந்தவர்கள், இயற்கையான, பெரிதும் புரிந்துகொள்ளப்படாத இந்த உறவை எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலம் காட்ட விரும்பினேன்” என்று வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் அப்போது கூறியிருந்தார்.
அண்மையில் வந்த பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எல்ஜிபிடிகியூவினரின் காதலை துருத்தலில்லாமல் பதிவு செய்தது. அவர்களை எங்கேயும் தனித்து அடையாளம் காட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் ரஞ்சித். படமும் அதையே பிரதிபலித்தது.
இந்திய சினிமாவிலும் பால்புதுமையினருக்கான படங்கள் குறைவுதான் என்றாலும், நட்சத்திர நடிகர்கள் அந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது படங்கள் பரவலான கவனத்தை ஈர்க்கின்றன. 2022-ல் வெளியான மாதுரி தீட்சித்தின் ‘மஜா மா’ இந்திப் படம் ஒரு பெண்ணின் உணர்வு சார்ந்த விருப்பங்களை குடும்ப அமைப்பிலிருந்து பேசியது. வெகுஜன சினிமாவான இப்படம் சில டெம்ப்ளேட் எண்ணங்களை அடித்து நொறுக்கியது. குறிப்பாக, “தன்பால் ஈர்ப்பு என்பது ஒருவர் மீதான அன்பின் நிமித்தமே தவிர, காண்பவர்களுடன் உறவு கொள்வதல்ல” என்ற படத்தில் வரும் ஒற்றை வசனம் அழுகிப்போன பொதுபுத்தியின் மீது கல்லெறிந்தது.
அதே ஆண்டு வெளியான ‘கோபால்ட் ப்ளூ’ இந்திப் படமும் தன்பால் ஈர்ப்பாளர்கள் காதலை வித்தியாசமாக சொல்ல முயன்றிருக்கும். ஆண், பெண் இருவரும் ஒரே நேரத்தில், ஒரே ஆணால் கைவிடப்படுகிறார்கள். கைவிடப்பட்ட நிலையில், அவர்களின் உணர்வுகளில் நிகழும் தாக்கங்கள், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பேசியிருக்கும். ‘இந்தியாவில் நாமெல்லாம் குற்றவாளிகள். நாம் பிறந்ததன் அடிப்படையில் நாம் குற்றவாளிகளாகத் தான் கருதப்படுவோம்’ என்ற வசனம் மூலம் ஒருவித வலி கடத்தப்பட்டிருக்கும். பெயின்டிங் போன்ற காட்சி அமைப்புகள் படத்தை இன்னும் அழகாக்கியிருக்கும்.
காதல் தி கோர்: ஜியோ பேபி – மம்மூட்டி கூட்டணியில் மலையாளத்தில் வெளியான இப்படம் இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பு. கிட்டதட்ட ‘மஜா மா’ பாணியிலான கதை என்றாலும், ‘காதல் தி கோர்’ விடுவித்தலின் தேவையை பேசியது. ‘திருமணமானால் எல்லாம் சரியாகிவிடும்’ என்ற பூச்சை உடைத்து. காதல் என்பது அவரவர் பாலியல் தேர்வைச் சார்ந்தது என்பதை குறிப்பிட்ட இப்படம், முதிர்ச்சியுடன் தன்பால் ஈர்ப்பாளர்கள் காதலை அணுகியது.
மம்மூட்டிக்கும் – சுதிக்கும் இடையிலான அன்பை அத்தனை அழுத்தமாக இருவருக்கும் இடையிலான எந்த வசனமும் இல்லாமல் பேசியது ஆகச்சிறந்த திரைக்கதை அம்சம். பால்புதுமையினருக்கான சினிமா என்ற எல்லையைக் கடக்கும் படம், பெண்ணுக்கான விருப்பத்தையும், சுதந்திரத்தையும் கோருகிறது. யார்யாருக்கு, யாருடன் வாழ விருப்பமோ அதை அவர்கள் வழியில் வாழ அனுமதிப்பதே ‘காதல்’ என்பதை அழுத்தமாக சொல்லிருப்பார் இயக்குநர் ஜியோ பேபி.
இந்த ஒற்றை வரிதான் மொத்த காதலின் வரையறையும். இதன்படி அவரவர்களின் உணர்வுகளை மதித்து, பொறுப்புடன் தன்பால் ஈர்ப்பாளர்கள் கதாபாத்திரங்களை இனியும், ‘அவனா நீ’ போன்ற கொச்சைப்படுத்ததுல் இல்லாமல் முதிர்ச்சியுடன் அணுக வேண்டியதை ‘மார்க் ஆண்டனி’ போன்ற தமிழ் படங்களின் இயக்குநர்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.