மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துக்களுக்கு தாகத்தை தணிக்க முஸ்லிம்கள் குளிர்பானம் வழங்கியது மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அமைந்தது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இந்துக்கள் கடும் வெயிலிலும் ஊர்வலமாக சென்றனர்.
அந்த வகையில் கிதர்பூரிலிருந்து பில்கானா வரை ஊர்வலமாக சென்றவர்களுக்கு அப்பகுதியில் இருந்த முஸ்லிம்கள் மாம்பழ ஜூஸ், சர்பத், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி தாகத்தை தணித்தனர். மேலும் சாலைகளில் சிலர் பூ இதழ்களை தூவியதுடன் சாலையோரம் நின்று புன்னகையுடன் அவர்களை கைகூப்பி வரவேற்றனர்.
இதுகுறித்து ஜங்ஷன் வெல்பேர் சொசைட்டி கிளப்பின் முகமது யூனுஸ் கூறும்போது, “அன்பையும் மரியாதையையும் காட்டும் வகையில் இந்து பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினோம். இது அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான எங்களின் சிறு பங்களிப்பு ஆகும். மதம் மக்களை இணைக்க வேண்டுமே தவிர நம்மை பிரிக்கக் கூடாது” என்றார்.
ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூறும்போது, “சூரியன் சுட்டெரித்த நிலையில் நாங்கள் சோர்வுடன் நடந்து சென்றோம். அப்போது முஸ்லிம் நண்பர்கள் எங்களின் சோர்வையும் தாகத்தையும் தணிக்கும் வகையில் குளிர்பானங்களை வழங்கி ஆச்சரியப்படுத்தினர்” என்றார்.