சொந்த வாகனத்தில் சைரன் பயன்படுத்திய மகாராஷ்டிர பெண் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

0
31

மகாராஷ்டிராவில் சொந்த வாகனத்தில் சிவப்பு சைரன் விளக்கு பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது. பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிர அரசு என்ற பலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

கூடுதல் ஆட்சியர் அஜய் மோர் இல்லாதபோது அவரது முன் அறையை பூஜா ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் அஜய் மோரின் அனுமதியின்றி நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தளவாடங்களை அகற்றியதுடன் வருவாய் உதவியாளரிடம் தனது பெயரில் லெட்டர் ஹெட், பெயர்ப் பலகை மற்றும் பிற வசதிகளை வழங்குமாறு கேட்டுள்ளார்.

விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளருக்கு புனே மாவட்ட ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் கடிதம் அனுப்பினார். இதையடுத்து அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக பூஜா புனேயிலிருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பான உத்தரவில், 2023-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா தனது எஞ்சிய பயிற்சி காலத்தில் வாஷிம் மாவட்டத்தில் பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

பூஜாவின் தந்தை, ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி ஆவார். அவர் தனது மகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.