விளையாட்டு உலகின் பிரம்மாணடத் திருவிழாவான ஒலிம்பிக் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அன்று பிரான்ஸில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் தங்கள் நாட்டு கொடியை உயர பறக்கச் செய்து நாட்டு மக்களை மகிழ்விப்போம் என உக்ரைன் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் சூளுரைத்துள்ளனர்.
அந்த நாட்டின் சார்பில் சிறிய அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்துள்ளது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 140 வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே உக்ரைன் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உயிரிழப்பு இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. முறையான பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் போன்ற காரணத்தாலும் சிறிய அணியை அனுப்பியுள்ளது உக்ரைன்.“ரஷ்யாவின் தாக்குதலால் வெப்பம், குளிர், இருள் என பல்வேறு சூழல்களில் மின்சாரம், தண்ணீர் போன்றவை இல்லாமல் பல மணி நேரங்களை நாங்கள் செலவழித்துள்ளோம். இது எங்களை வலுவடையச் செய்துள்ளது. எந்த சூழல் வந்தாலும் ஒரு தேசமாக எங்களை தகர்க்க முடியாது என்பதை உலகுக்கு வெளிக்காட்ட உள்ளோம்” என உக்ரைன் நாட்டின் வாள் வீச்சு வீராங்கனை விளாடா கார்கோவா தெரிவித்துள்ளார். இவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.பாரிஸ் ஒலிம்பிக்கை முன்னிட்டு ஆறு சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது உக்ரைன். அந்த நாட்டின் விளையாட்டு அமைச்சகத்தின் தரவுகளின் படி கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக சுமார் 479 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. சுமார் 500 விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்.
“உக்ரைன் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் எங்கள் வீரர்களின் செயல்பாடு பாரிஸ் ஒலிம்பிக்கில் இருக்கும். இது போரில் இருந்து சற்றே கவனத்தை திருப்பும் தருணமாக இருக்கும். ஒலிம்பிக்கில் எங்கள் நாட்டு கொடியை உயர பறக்கச் செய்ய வேண்டுமென்ற கனவுடன் வீரர்கள் இதற்கு தயாராகி உள்ளனர்” என்கிறார் நடாலியா டோப்ரின்ஸ்கா. இவர் 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை.