மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில தலைநகர் அமராவதி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு இம்முறை நிதிகளை அள்ளி கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசுக்கு உறுதுணையாக நிற்கும் சந்திரபாபு நாயுடு ஆளும் மாநிலமான ஆந்திர மாநிலத்திற்கு, பொருளாதார ரீதியாக நெருக்கடி உள்ளதால்,அதனை கவனத்தில் கொண்டும், மாநில பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்த தலைநகரத்திற்கான நிதி, போலவரம் அணைகட்ட நிதி, தொழிற்சாலைகள் அமைக்க போதிய உதவிகள், பின் தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி போன்றவை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.பட்ஜெட் உரையில், ஆந்திர மாநிலம் விவசாயிகளுக்கு ஜீவநாடியாக விளங்கும் போலவரம் அணைகட்டும் பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி உதவி செய்யும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.மாநில பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டபடி, பின் தங்கிய மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.50 கோடி வீதம் 4 ராயலசீமா மாவட்டங்கள் உட்பட பிரகாசம் மற்றும்3 கடலோர ஆந்திர மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படஉள்ளது. தலைநகர் அமராவதியின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15,000 கோடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவினை மசோதாவின் படி ஆந்திராவில் தொழில் தொடங்க முன் வரும் தனியார் நிறுவனங்களுக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர், பாசன நீர், சாலை, மின்சாரம், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும் ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு நன்றி: “ஐசியூவில் இருந்த ஆந்திராவின் நிதி நிலைமைக்கு இந்த பட்ஜெட் ஆக்ஸிஜன் அளித்தது போல் உள்ளது” என முதல்வர் சந்திராபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். அதோடு, பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு நிதி அளித்த பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மக்கள் சார்பில் சமூக வலைதளத்தில் நன்றியினை தெரிவித்துள்ளார்.