கன்னியாகுமரி மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பெருமளவு லஞ்சம் புரண்டோடுகிறது. குறிப்பாக அனுமதி இல்லாத சொத்துக்களை பதிவு செய்வதும் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மீண்டும் ஆவணங்களை விடுவிப்பது அதற்காக பல ஆயிரங்கள் முதல் லட்சங்களில் லஞ்சம் பெறுவது தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில் கொல்லங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் பெருமளவு லஞ்சம் கை மாறுவதாக கிடைத்த தகவலின் படி குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் நேற்று 23-10-2024 மாலை திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ஆவண அறையில் உள்ள மர பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அந்தப் படத்தை அங்கு மறைத்து வைத்ததாக சார்பதிவக ஊழியர் கேசவன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் மற்றொரு மர பீரோவில் 21 200 ரூபாயும் அலுவலக ஜூனியர் அசிஸ்டன்ட் வினோத்குமார் என்பவரிடம் இருந்து 1300 ரூபாயும் அலுவலக உதவியாளர் சுப்பிரமணியம் என்பவரிடமிருந்து 5700 ரூபாயும் சேர்த்து மொத்தம் 33 ஆயிரத்து இருநூறு ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இரவு 8 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.
போலீசார் திடீர் சோதனை நடத்தி பல்லாயிரம் ரூபாய் கைப்பற்றியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உள்ளது குறிப்பிடத்தக்கது.