8 மொழி தெரியும்: மும்மொழிக் கொள்கைக்கு மாநிலங்களவை எம்.பி சுதா மூர்த்தி ஆதரவு

0
33

மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனக்கு 8 மொழிகள் தெரியும் என மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் 3 மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு திமுக, ஆதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி கூறும்போது, “ஒரு நபரால் பல மொழிகளை கற்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. எனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும். எனவே, நிறைய கற்றுக்கொள்வதை விரும்புகிறேன். இதனால் குழந்தைகளுக்கும் பலன் கிடைக்கும்” என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறும்போது, “ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழி கொள்கையில் தமிழகம் தெளிவாக உள்ளது. ஆங்கில மொழி வணிக மற்றும் அறிவியல் உலகத்தை நம்முடன் இணைக்கிறது. நம்முடைய கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை தமிழ் பாதுகாக்கிறது. மூன்றாவதாக ஒரு மொழியை கற்க விரும்புகிறவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். இதை கட்டாயப்படுத்தக் கூடாது. மூன்றாவது மொழி திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here