மியான்மரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆன்லைன் மோசடி மையங்களில் பணிபுரிந்த மேலும் 266 இந்தியர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விளையாட்டு மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் ஆன்லைன் மோசடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை நடத்துவது பெரும்பாலானோர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற மோசடி மையங்களில் பணிபுரிய அதிக சம்பளம் தருவதாக கூறி இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளிலிருந்து பணியாளர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில், இதுபோன்ற மோசடி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மியான்மர் அண்மையி்ல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
மோசடி மையங்களில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுடன் வெளியுறவு அமைச்சகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. விமானப் படைக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக மேலும் 266 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 283 இந்தியர்கள் (ஆண்கள் 266, பெண்கள் 17) கடந்த திங்களன்று தாயகம் திரும்பினர். இதையடுத்து, இதுவரை மொத்தம் 549 இந்தியர்கள் மியான்மரின் மோசடி மையங்களில் இருந்து மீட்டகப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.