கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணா ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் கொச்சியில் உள்ள ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்று கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியது. இதற்கு லஞ்சமாக ஒவ்வொரு மாதமும் அந்த நிறுவனம் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்தவேண்டும் என ஊழல் கண்காணிப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார்.
அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், பினராயி விஜயன் மற்றும் வீணாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கைஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதுகுறித்து எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் கூறும்போது, “இதுவழக்கமான நடைமுறை. இனிவழக்கு விரிவாக விவாதிக்கப்படும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.
மேத்யூ குழல்நாடனின் சட்டப் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் வீணா தவிர பலரிடம் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஏற்கெனவே வாக்குமூலம் பெற்றுள்ளன.
ரூ.1.72 கோடி பெற்றதாக.. சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து எக்ஸாலாஜிக் நிறுவனம் ரூ.1.72 கோடி பெற்றதாக வருமான வரி தீர்வு வாரியம் குறிப்பிட்டதை தொடர்ந்து இந்த வழக்கில் மேத்யூ குழல்நாடன் தீவிரம் காட்டினார்.
பினராயி விஜயன் மற்றும் வீணா மீது இதேபோன்ற புகார்மனுவை கொச்சியை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதால் அவரது வழக்கில் நீதிமன்றத் துக்கு உதவிட வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த 2 மனுக்களும் ஒரேவிதமாக இருந்தாலும் தனித்தனியே விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.