அமெரிக்காவின் பிளெட்சர் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: மாலத்தீவில் கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்தியாவே வெளியேறு என்ற பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்தான் (முகமது முய்சு) அங்கு அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்தார்.
அவர் அதிபராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்நாட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் முக்கிய ஆலை திடீரென பழுதானது. இதனால் ஒட்டுமொத்த மாலத்தீவிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்நாட்டு மக்களுக்குக் குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லாத நிலை உருவானது.
மாலத்தீவில் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடைபெற்ற போதிலும், மத்திய அரசு ஒரு சிறந்த அண்டை நாட்டுத் தர்மத்தோடு நடந்து கொண்டது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மாலத்தீவு மீள்வதற்காக, இந்தியா விமானம் மூலமாகக் குடிநீர் அனுப்பியது.
இந்தியா எந்தவொரு தயக்கமும் காட்டாமல், லட்சக் கணக்கான லிட்டர் பாட்டில் குடிநீரை விமானத்தில் அனுப்பி அவர்களின் உயிரைக் காப்பாற்றியது. அதற்குப் பிரதிபலனாக இந்தியா வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அது ஒரு நல்ல அண்டை நாடாகச் செய்த அன்பான உதவி அவ்வளவு தான்.
இதன் பிறகு, அங்கு நிலவி வந்த இந்தியாவே வெளியேறு என்ற தீவிரப் பிரச்சாரம் கணிசமாகத் தணிந்தது. எனவே, தூதரக உறவுகளில் நம்பிக்கை என்பது செயல்களின் மூலமே கட்டமைக்கப்படுகிறது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.















