கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதி சேர்ந்தவர் காட்வின் நேசராஜ் (38). இவர் கிள்ளியூர் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவார். இவர் நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார்.
இந்த நிலையில் அவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அவரது சகோதரர் தனது பெயரில் பத்திரம் எழுதி முடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த பிரமுகர் மனைவி தனது கணவருக்கு உரிமை பட்ட சொத்தை தனது மகனின் பெயருக்கு கணவரின் இறுதிச்சடங்குக்கு முன்பாக எழுதி தரட்டும். அவ்வாறு எழுதி தரவில்லை எனில் தனது கணவரின் உடலை அடக்கம் செய்ய விட மாட்டேன் என்று கூறி கருங்கல் போலீசில் புகார் மனு அளித்தார். அவருக்கு ஆதரவாக ஊர் பொதுமக்களும் காங்கிரஸ் கட்சியினரும் அவர் வீட்டில் திரண்டனர்.
இதையடுத்து கிள்ளியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ராஜசேகரன் தலைமையில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலையில் இரு தரப்பினர் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று வியாழக்கிழமை உயிரிழந்த காங்கிரஸ் பிரமுகர் மகனின் பெயரில் மனைவியை பரிந்துரைக்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படும். அதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து பொதுமக்கள் கரைந்து சென்றனர்.