வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைச்சர்கள் கறுப்பு பட்டையுடன் தொழுகை

0
40

வக்பு சட்டத் திருத்த‌ மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் கறுப்பு பட்டை அணிந்து ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வக்பு சட்டத் திருத்த சட்ட மசோதாவுக்கு பெரும்பான்மையான முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரம்ஜான் திருநாளான நேற்று கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் ஆகியோர் நேற்று பெங்களூருவில் தொழுகையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர். அவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் கறுப்பு பட்டை அணிந்து ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் ஜமீர் அகமது கான் பேசுகையில், “மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் தலைவர்கள் நாடு முழுவதும் அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் காரண‌மாக நானும் கறுப்பு பட்டை அணிந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டேன்.

வக்பு சட்டம் மிகவும் பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் அந்த சட்டத்தை மத்திய அரசு மாற்றக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. கர்நாடக அரசு இந்த திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here