கல்வியில் அரசியலை கலக்கக் கூடாது என்றும், பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆளுநரின் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார்கள். சாதாரண நிகழ்ச்சியிலோ, பொது நிகழ்ச்சியிலோ ஆளுநர் கலந்து கொண்டால் அதை புறக்கணித்தால் பரவாயில்லை. ஆனால், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல. பட்டமளிப்பு விழா என்பது அரசியலையும் தாண்டி நடைபெறும் நிகழ்வு. பட்டம் பெறும் மாணவர்களை, நல்வழிப்படுத்துவதற்கு அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்றிருக்க வேண்டும்.
எனவே, பட்டமளிப்பு விழாவை புறந்தள்ளுவது சரியல்ல. கல்வியில், அரசியலை கலப்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு செய்யக்கூடாது. புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பிரதமரின் அனைத்து புதிய கல்வி திட்டங்களையும், துணை வேந்தர் நியமனம் என எல்லாவற்றையும் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படை கல்வி, உயர்கல்வி என அனைத்திலும் அரசியலை புகுத்துகிறார்கள். மாற்றுக் கருத்துக்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் காண்பிக்க கூடாது. கூட்டணி கட்சிகளுடன் விவாதங்கள் தான் இருக்கிறது. விரிசல் இல்லை மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால், உண்மையில் விரிசல்களை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு சுலபமாக இருக்காது. எந்த ஆட்சி அமைந்தாலும், அது கூட்டணி ஆட்சியாகத் தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.