தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதுதவிர, தாம்பரம் – கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களில் முக்கிய நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயிலில் (06001) டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதற்கடுத்து காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, ‘ரெக்ரெட்’ என்று காட்டியது. அதேநேரத்தில், நவ.5-ம் தேதிக்கு டிக்கெட்கள் உள்ளன. மறுமார்க்கமாக, கன்னியாகுமரி – சென்னை எழும்பூருக்கு அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில்புறப்படும் சிறப்பு ரயிலில் (06002) முன்பதிவு இடங்கள் தாராளமாக உள்ளன.
சென்னை சென்ட்ரல் – செங்கோட்டைக்கு அக்.30-ம் தேதி புறப்படும் சிறப்புரயிலில் (06005) டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 178 ஆக இருக்கிறது. இதே ரயிலில் நவ.6-ம் தேதியும், மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்.31, நவ.7 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06006) முன்பதிவு டிக்கெட்கள் உள்ளன.
இதேபோல், தாம்பரம் – கன்னியாகுமரிக்கு அக்.29-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயிலில் (06049) டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை 132 ஆக உள்ளது. இதேரயிலில் நவ.12-ம் தேதிக்கு டிக்கெட் போதிய அளவு உள்ளது. மறுமார்க்கமாக, கன்னியாகுமரி – தாம்பரத்துக்கு அக்.29, நவ.5,12ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்புரயிலில் (06050) டிக்கெட்கள் உள்ளன.
சென்னை சென்ட்ரல் – போத்தனூருக்கு அக்.29-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06021) டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் (61) காட்டுகிறது. இதேரயிலில் நவ.2-ம் தேதிக்கு போதிய இடங்கள் உள்ளன. மறுமார்க்கமாக, கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரலுக்கு அக்.31, நவ.4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயிலில் டிக்கெட்கள் இருக்கின்றன.
இதற்கிடையே, தீபாவளியையொட்டிசென்னையில் இருந்து சரியான நாட்களில் சென்று திரும்பும் வகையில் சிறப்புரயில்கள் அறிவிக்க வேண்டும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.