தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி பணியில் தமிழ், ஆங்கிலம் தெரியாத மத்திய அரசு ஊழியர்களை நியமிப்பதால், வாக்குப்பதிவு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.73 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வரும் ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் சுமார் 3.40 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 3 லட்சம் பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடியின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளர்களாக இருப்பர். வாக்குச்சாவடி அலுவலர்-1, 2 மற்றும் 3 ஆகியோரும் பணியில் இருப்பார்கள்.
இந்த தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின்கீழ் இயங்கும் கல்பாக்கம் அணுமின் நிலையம், ஆவடி படை உடை தொழிற்சாலை, கனரக வாகன தொழிற்சாலை, திருச்சி மற்று ராணிப்பேட்டையில் இயங்கும் பெல் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் இதர மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 2 கட்ட பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு வாக்குசசாவடி தலைமை அலுவலர் மற்றும் அவர்கள்கீழ் பணியாற்றும் 3 அலுவலர்கள் என குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான வாக்குச்சாவடிகள் இணைய குலுக்கல் முறையில் விரைவில் ஒதுக்கப்பட உள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு நிறுவன ஊழியர்கள் பலருக்கு இந்தி மட்டுமே நன்றாக தெரிந்திருக்கிறது. சிலருக்கு ஆங்கிலம் கூட தெரியவில்லை. வாக்காளர் பட்டியல் தமிழில் மட்டுமே அச்சிட்டு வழங்கப்படுகிறது.
இதனால், இவர்களை வாக்குச்சாவடி அலுவலர் 3-ல் மட்டுமே நியமிக்க முடியும். ஒரு வாக்குச்சாவடியில் இதுபோன்ற ஊழியர்கள் 2 பேர் வந்துவிட்டால், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பாடு திண்டாட்டம்தான்.
எனவே தமிழ் தெரியாதவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கலாம் என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.














