இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்ட சம்பவம்: அமெரிக்கா கூறும் விளக்கம் என்ன?

0
38

 “எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார். அந்த வகையில் சட்டவிரோத குடியேறிகள், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறியது உள்ளிட்ட காரணங்களுக்காக 1000+ இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு, தரையில் மண்டியிட வைத்து, கட்டாயமாக வெளியேற்ற முயன்றது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூட, ”இந்திய மாணவர் ஒருவருக்கு நேவார்க் விமான நிலையத்தில் நேர்ந்தவை பற்றிய வீடியோக்களைப் பார்த்தோம். இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். எப்போதும் இந்தியர்கள் நலன் பேணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “அமெரிக்கா தனது நாட்டுக்கு சட்டபூர்வ பயணிகளை தொடர்ந்து வரவேற்கிறது. இருப்பினும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகச் செல்ல எந்த உரிமையும் இல்லை. சட்டவிரோத நுழைவு, விசாக்களை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது அமெரிக்க சட்டத்தை மீறுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் நடக்கும் நிலையில், விசா வழங்குதலை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here