அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?

0
8

அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தைக் குறைத்தல், ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டுக்கு மாற்றுவது உள்ளிட்ட அம்சங்களை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

அதேபோல், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை ஈரான் இணைத்துள்ளது. இது பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம் என பேசப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வர்ஜீனியாவில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பாக ஈரானிடம் இருந்து இன்று இரவு பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான செயல்முறையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. விரைவில் தெரிந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் அமைப்பு ரீதியாக மிகவும் பிளவுபட்டுள்ளது. அது செயலிழந்தும் உள்ளது. எனவே, அது ஒரு தடையாக இருக்கலாம். எனினும், ஈரானின் பதில் தீவிரமான பேச்சுவார்த்தை செயல்முறைக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது” என தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்தம் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 11-ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதன் பின்னர் போர் நிறுத்தத்தை டொனால்டு ட்ரம்ப் தேதி குறிப்பிடாமல் நீட்டித்தார். அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here