டிஜிட்டல் சுகாதார திட்டங்களில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் கலங்கரை விளக்கமாக இந்தியா வழிகாட்டுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.
குவாட் கூட்டமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் சார்பில் இந்தோ-பசிபிக் பிராந்திய பெருந்தொற்று தடுப்பு தயார் நிலை குறித்த 3 நாட்கள் கருத்தரங்கை மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது இந்தியா உருவாக்கிய கோவின் தளம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முன்மாதிரியாக அமைந்தது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மிக குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை கண்டுபிடித்தோம். இதேபோல மிக குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் தடுப்பூசிகளை தயாரித்தோம். இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தோம்.
கோவின் தளம் போன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம், இ-சஞ்சீவினி டெலிமெடிசின் திட்டம், டெலி-மனாஸ் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சுகாதார திட்டங்களை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய டிஜிட்டல் சுகாதார திட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் கலங்கரை விளக்கமாக இந்தியா வழிகாட்டுகிறது. எங்களது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்காக புதிய நிதியத்தை ஏற்படுத்தி உள்ளோம். இந்த நிதியத்துக்கு இந்தியாவின் சார்பில் ரூ.86.80 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.104 கோடியை வழங்க உறுதி அளித்திருக்கிறோம். இவ்வாறு அனுபிரியா படேல் பேசினார்.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் புனியா சாலிலா ஸ்ரீவஸ்தவா பேசியதாவது: உலகின் மருந்து உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இதேபோல மருத்துவ ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நாடாக அமெரிக்கா விளங்குகிறது. ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் புதுமையான தொழில்நுட்பங்களில் முன்னோடியாக விளங்குகின்றன. நான்கு நாடுகளும் இணைந்து இந்திய, பசிபிக் பிராந்தியத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன. எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது பெருந்தொற்று உருவானால் குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும். இந்திய, பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும். இவ்வாறு புனியா சாலிலா ஸ்ரீவஸ்தவா பேசினார்.