குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை

0
139

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கொட்டாரம் பகுதியில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 5 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. இடைவிடாது கொட்டிய கனமழையின் காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. சாமி தோப்பு, முகிலன் குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், மயிலாடி, அஞ்சுகிராமம், சுசீந்திரம் பகுதிகளில் கனமழை பெய்தது.கொட்டாரத்தில் அதிகபட்சமாக 103.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

குருந்தன்கோடு, நாகர்கோவிலிலும் நேற்று இரவு விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தவாறு சென்றனர்.குருந்தன்கோடு, குளச்சல் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. திற்பரப்பு, ஆணைக்கிடங்கு, கன்னிமார், தக்கலை, இரணியல் பகுதிகளிலும் விட்டுவிட்டு இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள குளங்கள் நிரம்பி வருகிறது.

விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.19 அடி யாக இருந்தது. அணைக்கு 670 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 535 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.80 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.10 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக குலசேகரம்,கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை, செண்பக ராமன்புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.மழைக்கு நேற்று 3 வீடுகள் இடித்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 17.4, பெருஞ்சாணி 16, சிற்றாறு 1-40.2, சிற்றாறு 2-17, கன்னிமார் 6.4, கொட்டாரம் 103.4, மயிலாடி 74.6, நாகர்கோவில் 78.2, ஆரல் வாய்மொழி 3, பூதப்பாண்டி 10.2, பாலமோர் 10.6, தக்கலை 29.6, குளச்சல் 66, இரணியல் 56.4, ஆணை கிடங்கு 16, குருந்தன்கோடு 91,கோழிப்போர்விளை 24.8, மாம்பழத்துறையாறு 12, களியல் 16.2, குழித்துறை 12, புத்தன் அணை 17.4, சுருளோடு 7,ஆணைகிடங்கு 11.4, திற்பரப்பு 36.8, முள்ளங்கினாவிளை 32.6.