அமெரிக்காவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் ஹைட்ரஜனுக்கு உற்பத்தி வரிக்கடன் போன்ற சலுகைகளை வழங்கி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை கணிசமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று அவன்டஸ் எனர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் ரமேஷ் கூறினார்.
எஃகு, அலுமினியம் மற்றும் சிமென்ட் போன்ற தொழில்களுக்கு அதிக வெப்பநிலை செயல்முறைகள் தேவைப்படுகின்றன. அவை மின்சாரத்தால் மட்டுமே திறமையாக இயங்காது. எனவே பசுமை ஹைட்ரஜன் ஒரு சுத்தமான, உயர் ஆற்றல் எரிபொருள் மாற்றாக விளங்குகிறது. இது கார்பன் உமிழ்வையும் அதிகளவில் குறைப்பதால் உலகளாவிய காலநிலை இலக்குகளுக்கு பங்களிக்க முடியும்.
அதேபோல போக்குவரத்துத் துறையும் ஹைட்ரஜனால் பயனடையும். ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாது. அதே வேளையில் பெட்ரோலிய எரிபொருட்கள் மீதான சார்பையும் குறைக்கும். இந்தியா தனது போக்குவரத்துத் துறையை மின்மயமாக்கும் நோக்குடன் செயல்படுகிறது.
ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் நீண்ட தூரம் ஓடுபவையாக இருப்பது மட்டுமின்றி வேகமாக எரிபொருளையும் நிரப்ப முடியும். எனவே கனரக வாகனங்கள், நீண்ட தூர போக்குவரத்துக்கு வாகனங்களுக்கு ஏற்றதாக பசுமை ஹைட்ரஜன் உள்ளது.
எலக்ட்ரோலிசிஸ் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்த முடியும்.
இது நம்பகமான மற்றும் தொடர்ச்சியான ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்யும் மற்றும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். இதைத் தயாரிக்க பெட்ரோலிய எரிபொருள் தயாரிப்பு முறைகளை விட குறைந்த செலவே ஆகிறது.
சூரிய மின்னுற்பத்தி நிலையங்களையும், எலக்ட்ரோலிசிஸ் முறையைப் பயன்படுத்தி ஆன்சைட் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதிகளையும் எதிர்காலத்தில் இணைக்கலாம். இந்த நடைமுறை அமெரிக்காவில் ஏற்கெனவே அதிகமாகி வருகிறது.
அங்கு பசுமை ஹைட்ரஜனுக்கு உற்பத்தி வரிக்கடன் போன்ற சலுகைகள் அளிக்கப்பட்டதைப் போல இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தி, பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை கணிசமாக அதிகரிக்க செய்ய வேண்டும் என்றார்.