சென்னையில் முதல்முறையாக மாற்றுத் திறனாளி வீரர்களுக்காக விளையாட்டு விடுதி அமைக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 62 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா, நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஊக்கத் தொகையுடன் 6 விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.10.90 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் அதிநவீன சைக்கிள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
ரூ.27.18 கோடி ஊக்கத்தொகை: அதைத்தொடர்ந்து அவர் பேசும்போது, “திமுக பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் 258 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு ரூ.27.18 கோடி மதிப்பீட்டில் உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 198 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5.29 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பாரா விளையாட்டு வீரர்களுக்காக சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.7.05 கோடி மதிப்பில் புதிய பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளன. மேலும் சென்னையில் முதல்முறையாக மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான விளையாட்டு விடுதி அமைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக சுயஉதவிக் குழு மகளிரின் மன வளத்தையும், உடல் உறுதியையும் மேம்படுத்தும் வகையில் கால்பந்து, கோகோ, கபடி, ரங்கோலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பன்முக கலாச்சார போட்டிகள் மண்டல அளவில் நடத்தப்பட்டிருந்தன.
இதில் வெற்றிபெற்ற 24 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சுயஉதவிக் குழுக்களில் உள்ள 400 மகளிர் பங்கேற்கும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.