இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டல் எதிரொலி: மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த பாதுகாப்பு

0
43

மகாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. இது தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. இதில், பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இதனால், மார்ச் 26 வரை பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சத்ரபதி சம்பாஜி நகரில் இருக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற வலியுறுத்தல் மீண்டும் எழுந்தது. இதற்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவாகப் பேசினார்.

இச்சூழலில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர் கூறுகையில், “அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம். அரசு சார்பில் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம்” என்று தெரிவித்தனர். இதற்காக, விஎச்பி, பஜ்ரங்தளம் சார்பில் மகாராஷ்டிராவில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இந்தப் பிரச்சினையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான விஜய் வடெட்டிவார் கூறுகையில், “விஎச்பி, பஜ்ரங்தளம் அமைப்புகளுக்கு இனி செய்வதற்கு எதுவும் இல்லை. மகாராஷ்டிர மக்கள் நிம்மதியாக வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை குறைக்க விரும்புகின்றனர்” என்றார். இந்நிலையில் அவுரங்சீப் சமாதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here