கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததை கண்டித்தும், `பெண்களை காப்பது நமது கடமை’ எனும் தலைப்பில் நீதி கேட்டும் டாக்டர் ராஜரத்தினம் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் லைஃப்லைன் மருத்துவமனை, நோபல் மருத்துவமனை, சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன், இன்னர் வீல் கிளப், பிரசாந்த் மருத்துவமனை ஆகியவையும் இணைந்திருந்தன.
டாக்டர் ராஜரத்தினம் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், லைஃப்லைன் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவருமான மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் லைஃப்லைன் மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சித்ரகலா ராஜ்குமார், சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன் அறங்காவலர் மற்றும் இயக்குநர் மருத்துவர் விஜய பாரதி ரங்கராஜன், இன்னர் வீல் மாவட்ட தலைவர் பாத்திமா நசிரா, இந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், மருத்துவர் கே.பி.ரவீந்திரன், சமூக ஆர்வலர் சாய் சுதாகர் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பிசியோதெரப்பிஸ்ட்கள் என 300 பேர் பங்கேற்றனர்.போராட்டத்தில் ‘பெண்ணை போற்றுவதே நம் பெருமை – கடமை’, ‘பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்போம்’, ‘பெண்கள் அச்சமின்றி வாழ வழி செய்வோம்’ போன்ற பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர். அப்போது, டாக்டர் ராஜரத்தினம் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் கூறியதாவது:கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அந்த கடுமையான தண்டனையை விரைவாக அளிக்க வேண்டும். அனைத்து பெண்களும் 181 உதவி எண்ணை செல்போனில் வைத்திருக்க வேண்டும். காவல் உதவி செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பெப்பர் ஸ்ப்ரே வைத்திருக்க வேண்டும். கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால், கைது, சிறை போன்று ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறார்களிடம் சரியான தொடுதல், தவறான தொடுதல் (குட் டச், பேட் டச்) குறித்து விளக்கி புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.