டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏகியூஎம்) உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல், பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது நீதிபதிகள் கூறும்போது, “பயிர்க் கழிவுகளை எரிக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் கடுமையான விதிகள் இல்லை. சட்டம், விதிகளை பொருட்படுத்தாமல் விவசாயிகள், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாநிலங்களிலும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. கடுமையான சட்டவிதிகள் இல்லாததாலும், அதை சரிவர அமல்படுத்தாததாலும் தொடர்ந்து பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுகின்றன. பயிர்க்கழிவுகளை எரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து பயிர்க் கழிவுகளை எரித்தால் அதிக அபராதம் விதிப்பது தொடர்பான புதிய சட்டவிதிகளை, காற்று தர மேலாண்மை ஆணைய சட்டத்தின் கீழ் அடுத்த 10 நாட்களில் மத்திய அரசு வெளியிடும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “சுத்தமான மற்றும் மாசு இல்லாத சூழலில் வாழ்வது அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமை. குடிமக்களின் உரிமையை நிலைநாட்டுவது மத்திய, மாநில அரசுகளின் கடமை’’ என்று தெரிவித்தனர்.
‘‘பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதை நிறுத்துவதற்கான உத்தரவை ஏன் அதிகாரிகள் பின்பற்றவில்லை. அவர்கள் மீது ஏன் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’’ என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏகியூஎம்) சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் பயிர்க்கழிவுகளை எரிக்கும் நபர்கள் மீது போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்கான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், குறிப்பிடத்தக்க வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை” என்று கண்டனம் தெரிவித்தனர்.
1080 எஃப்ஐஆர்: அப்போது பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளரிடம் நீதிபதிகள் கூறும்போது, ‘‘பயிர்க்கழிவு எரிப்பு தொடர்பாக, பஞ்சாபில் பதிவுசெய்யப்பட்ட 1080 முதல் தகவல்அறிக்கைகளில் (எஃப்ஐஆர்) 473 நபர்களிடமிருந்து மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 600-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று நீங்கள் ஒரு சமிக்ஞையை வழங்குகிறீர்கள் என்று நாங்கள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டுகிறோம். இந்த விவகாரம் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.