மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கேரள தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பட்டாசு வெடிப்பதில் மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள் பகுத்தறிவற்ற செயல் மட்டுமின்றி தேவையற்றதுமாகும். மாநிலங்களில் பட்டாசு வெடிப்பது என்பது சடங்குகளின் ஒரு பகுதி. மதப் பண்டிகைகளின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க அது முக்கியத்துவம் வாய்ந்தது. திருச்சூர் பூரம் விழாவில் மணிக்கணக்கில் நீடிக்கும் வானவேடிக்கை காட்சிகள் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தினால் பூரம் நாளில் பட்டாசு வெடிப்பதை கைவிட வேண்டி இருக்கும். இது தேவையற்ற போராட்டங்களை உருவாக்கும். எனவே பண்டிகைகளின் ஒரு அங்கமாக விளங்கும் வான வேடிக்கைகளுக்கு நிபந்தனை விதித்து வெளியிடப்பட்ட அரசிதழில் தகுந்த மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். திருச்சூர் பூரம் உட்பட அனைத்து விழாக்களையும் அதன் அனைத்து பாரம்பரிய சடங்குகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் வாசவன் தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரித்து கேரள மாநிலவருவாய் துறை அமைச்சர் கே.ராஜனும் கடிதம் எழுதி இருந்தார்.