இந்தியாவின் அரிய வகை பறவை இனங்களில் ஒன்று கான மயில். தற்போது இந்தியாவில் மொத்தம் 150 கான மயில்களே உள்ளன.
இந்நிலையில், கான மயிலை பாதுகாக்கும் நோக்கிலும், அதன் இனத்தைப் பெருக்கும் நோக்கிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2016-ம் ஆண்டு கான மயில் மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாலை வன தேசிய பூங்காவில் கானமயில் இனப்பெருக்க மையம் அமைக்கப்பட்டது. கான மயில்களில் செயற்கை கருவூட்டல் செய்வது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது அதில் வெற்றி கிட்டியுள்ளது.
கான மயில் குஞ்சுராம் தேவ்ரா கான மயில் இனப்பெருக்க மையத்தில் உள்ள சுதா என்ற 3 வயது ஆண் கான மயிலின் விந்தணுவை எடுத்து, ஜெய்சால்மர் மையத்தில் உள்ள டோனி என்ற 5 வயது பெண் கான மயிலுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினர். இதையடுத்து டோனி கான மயில் செப்டம்பர் 24-ம் தேதி முட்டையிட்டது. அந்த முட்டையிலிருந்து கடந்த அக்டோபர் 16-ம் தேதி குஞ்சு வெளியே வந்துள்ளது.
இதுகுறித்து ஜெய்சால்மர் வன பாதுகாப்பு அதிகாரி ஆஷிஸ் வியாஸ் கூறுகையில், “கான மயில் பறவை இனம் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், செயற்கை கருவூட்டல் மூலம், கான மயில் குஞ்சு பொரித்துள்ளது. இது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அபுதாபியை தளமாகக்கொண்ட செயற்கைக் கருவூட்டல் தொடர்பான ஹூபரா பாதுகாப்புக் கான சர்வதேச நிதியத்திடம் பயிற்சி பெற்று ஜெய்சால்மர் விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். உலக அளவில் செயற்கை கருவூட்டல் மூலம் கான மயில் குஞ்சு பொறித்திருப்பது இதுவே முதன்முறை” என்று தெரிவித்தார்.