கடலூர்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடலூர் வள்ளலார் சர்வதேச மையகட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின.
வடலூரில் உள்ள அருட்பிரகாச வள்ளலாரின் சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், வடலூர் பெருவெளியில் ரூ.99.90 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் தொடங்கின.
ஆனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சர்வதேச மையம் அமைக்கப்படுவதாக புகார்தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அங்குள்ள பார்வதிபுரம் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தல் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், சர்வதேச மையம் அமைக்க தடை கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, சர்வதேச மையம் அமையும் இடத்தை தொல்லியல் துறை குழு நடத்தி, அந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறை மற்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். வள்ளலார் தெய்வநிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறங்காவலர் குழு அமைக்க வேண்டும். அனைத்து துறைகளிடமும் அனுமதி பெற்று, சர்வதேச மையம்அமைக்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ஆக்கிரமிப்பு நிலங்கள்யார் பெயரில் உள்ளது என்றுவிரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது.
தொடர்ந்து, சர்வதேச மையகட்டுமானப் பணிகளை 2-வதுபகுதியில் மட்டும் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வடகிழக்குப் பருவமழை காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சர்வதேசமைய கட்டுமானப் பணிகள் நேற்றுதொடங்கின. அங்கு சித்த மருத்துவமனை, முதியோர் இல்லம், தங்கும்விடுதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.