கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட செங்கவிளையில் ஏ ஆர் எஸ் நியாய விலை கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. நீண்ட வருடங்களாக இரண்டு பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வந்த கடையில் சில மாதங்களாக விற்பனையாளர் ஒருவர் மட்டும் பணிபுரிகிறார். தற்போது இருக்கும் இயந்திரம் சரியாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. விற்பனையாளர் பில் போட்டு ஒரு நபருக்கு மட்டும் பொருட்கள் வழங்க சுமார் 20 நிமிடம் ஆகிறது. இதனால் பொருட்கள் வழங்கும் நாளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
மேலும் சரியான எடையில் பொருட்கள் வழங்கவில்லை என்ற புகார் உள்ளது. குறிப்பாக கடையில் இன்னும் ஆயிரக்கணக்கான காலி சாக்குகள் குவித்து வைத்துள்ளதால் மக்களுக்கு உள்ளே சென்று பொருட்கள் வாங்க இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆகவே கடையில் இருப்பு வைத்து இருக்கும் காலி சாக்குகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடைக்காகுழி வட்டாரச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.