மணவாளக்குறிச்சி அருகே கருங்காலிவிளையைச் சேர்ந்தவர் புஷ்பலதா. மாற்றுத்திறனாளியான இவர், கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு செல்வபெருமாள் மகன் மகேந்திர கொடிலனுக்கும், 40, முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் மகேந்திர கொடிலன், புஷ்பலதாவிடம் தகராறு செய்தார். மணவாளக்குறிச்சி எஸ்.ஐ., வில்சன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு எஸ்.ஐ., பிரபுநாதன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று மகேந்திர கொடிலனை தடுக்க முயன்றனர்.
அப்போது, அவர் தன் கையில் இருந்த மண்வெட்டியால் எஸ்.ஐ., பிரபுநாதனை பயங்கரமாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற எஸ்.ஐ., வில்சன் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த எஸ்.ஐ., வில்சன், மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய மகேந்திர கொடிலன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகேந்திர கொடிலன் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.