கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே போலீஸ் எஸ்.ஐ.,யை வெட்டிக் கொல்ல முயன்ற மாஜி ஏட்டு மகனை போலீசார் கைது செய்தனர்.
மணவாள குறிச்சி அருகே கருங்காலிவிளையை சேர்ந்தவர் புஷ்பலதா. மாற்றுத்திறனாளியான இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஏட்டு செல்வ பெருமாள் மகன் மகேந்திர கொடிலனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் மகேந்திர கொடிலன் மண்வெட்டியால் புஷ்பலதா வீட்டு கூரையை அடித்து உடைத்துக் கொண்டிருந்தார். தகவலறிந்த மணவாளக்குறிச்சி எஸ்.ஐ., வில்சன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு எஸ்.ஐ., பிரபு நாதன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று மகேந்திரக் கொடிலனை தடுக்க முயன்றனர்.
அப்போது அவர் தன் கையில் இருந்த மண்வெட்டியால் எஸ்.ஐ., பிரபு நாதனை வெட்டினார். தடுக்க முயன்ற எஸ்.ஐ., வில்சன் இடது கையில் காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற சில போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.
எஸ்.ஐ., வில்சன் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகேந்திர கொடிலன் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணவாளக்குறிச்சி போலீசார் மகேந்திர கொடிலன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.