வங்கிகளை தனியார்மயமாக்க முயன்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்: தொழிற்சங்கம் எச்சரிக்கை

0
133

வங்கிகளை தனியார்மயமாக்க முயன்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் எச்சரித்துள்ளார்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், 3-வது தேசிய இளம் ஊழியர்கள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டுக்கு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ராஜன் நாகர் தலைமை வகித்தார். சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளரும், அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சி.ஸ்ரீகுமார் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசும்போது, அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் மட்டும் 2.50 லட்சம் காலிப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் இல்லை. டிஆர்டிஓ ஆய்வகங்களில் தனியார் நிறுவனங்கள் எவ்வித முதலீடும் இன்றி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றார்.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் பேசியதாவது: வங்கிகளில் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. தனியார் வங்கிகள் இன்றைக்கு நல்ல சேவை வழங்காததால் பொதுமக்கள் அரசு வங்கிகளை நாடி வருகின்றனர். அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுத்துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவை வழங்க வேண்டும். ஆனால், வங்கிகளில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் குறைவான ஊதியத்தில் ஊழியர்கள் நியமிப்பது, தனியார்மயம் செய்வது போன்ற தவறான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் இடஒதுக்கீட்டு உரிமை போய்விடும். வேலைவாய்ப்பும் குறையும். மக்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்.

எனவே, வங்கிகளை தனியார்மயமாக்க முயற்சி செய்தாலோ அல்லது வங்கிகளில் உள்ள நிரந்தர பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப நினைத்தாலோ மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, ‘இளைஞர்கள் நேரம் ஒதுக்கி சிந்திக்க வேண்டும். அதிகம் வாசிக்க வேண்டும். இளைஞர்கள் சிந்தித்தால் நாடு முன்னேறும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here