காலனித்துவ அடையாளங்களை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி அசோக் குமார் மிட்டல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) நடைபெற்ற விவாதத்தின்போது கூறியதாவது: பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின்போது இருந்த இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் மத்திய அரசின் முயற்சி பாராட்டுக்கு உரியது. பிரிட்டிஷாரின் பெருமையை பேசும் இதுபோன்ற பல இடங்களுக்கு பெயர்மாற்றம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு இன்னும் வேகமாக முன்னெடுக்க வேண்டும்.
காலனித்துவ ஆட்சி காலத்தின் பெயர்கள் சுமையாகவும், அது பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இந்தியா அடிமையாக இருந்த கடந்த கால உணர்வுகளையும் வெளிப்படுத்தும் குறியீடாகவே உள்ளது.
இந்த எண்ணத்தை மாற்றிடும் வகையில், ராஜ்பாத் கர்தவ்யா பாதையாகவும், இண்டியன் பீனல் கோடு பாரதிய நியாய சன்ஹிதாகவு்ம், அலகாபாத் பிரயாக்ராஜாகவும் மாறியுள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முன்னெடுப்பை வரவேற்க வேண்டும். ஆனால், இன்னும் பல இடங்களுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது சூட்டப்பட்டட பெயர்கள்தான் நிலைத்து நிற்கின்றன. உதாரணமாக, அலகாபாத் நகரத்தின் பெயர் பிரயாக்ராஜாக மாற்றப்பட்டாலும் பெருமைவாய்ந்த பல்கலைக்கழகம் மற்றும உயர்நீதிமன்றம் அலகாபாத் பெயரில்தான் இன்னும் உள்ளன. இதேபோன்று மக்களவை தொகுதியின் பெயரும் பிரயாக்ராஜுக்கு பதிலாக அலகாபாத் என்றுதான் உள்ளது. இதுபோன்றவற்றை மாற்றுவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அசோக் குமார் கூறினார்.