செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) உதவியால் இன்னும் 10 ஆண்டுகளில் புற்றுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டாரியோ அமோடெய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாரியோ அமோடெய் கூறியுள்ளதாவது: சமீப காலத்தில் ஏஐ தொடர்பான தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. நாம் ஏஐ தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், மனிதகுலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக் தீர்க்க முடியாமல் தவிக்கும் மருத்துவச் சவால்களுக்குத் தீர்வு காணும் ஒரு விந்தை யுகத்தைப் படைக்க முடியும். அதன் விளைவாக, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புற்றுநோய், அல்சைமர், இதய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்றவை முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவை கடந்தகால எச்சங்களாக மாறிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இவரைப் போலவே எலான் மஸ்க் மற்றும் கூகுள் டீப்மைண்ட் தலைவர் டெமிஸ் ஹாசாபிஸ் போன்ற முன்னணி தொழில்நுட்பத் தலைவர்களும், ஏஐ மூலம் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளைக் கண்டறிந்து நோய்களை முறியடிக்க முடியும் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மருந்து நிறுவனங்கள் சர்ச்சை
ஏஐ தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் இத்தகைய நம்பிக்கையான வாக்குறுதிகளை அளித்தாலும், நிஜத்தில் மருந்துகளைத் தயாரிக்கும் அறிவியலாளர்களும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களும் இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுப்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
வெர்டெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் தலைவர் ஜெஃப் லைடன் கூறும்போது, “சுமார் 10,000 மருந்துச் சேர்மங்களை ஆய்வு செய்து புதிய மருந்தைக் கண்டுபிடிக்க 50 ஏஐ நிறுவனங்களின் உதவி நாடப்பட்டது.
ஆனால், அதில் ஒரே ஒரு ஏஐ நிறுவனம் கூட தானாகச் செயல்பட்டுப் பயன்படுத்தக்கூடிய ஒரு மருந்தைக் கூட உருவாக்கித் தரவில்லை. எனவே ஏஐ தொழில்நுட்பம் 10 ஆண்டுகளில் நோய்களைக் குணப்படுத்திவிடும் என்ற கூற்று முற்றிலும் சாத்தியமற்றது” என்றார்.
1970-களில் அறிவிக்கப்பட்ட ‘புற்றுநோய்க்கு எதிரான போர்’ திட்டம் பல தசாப்தங்களாக நீடித்த வரலாற்றைச் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், நடைமுறைச் சாத்தியக்கூறுகளைத் தாண்டி அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளைப் பொதுமக்களிடம் விதைப்பது சரியல்ல என எச்சரிக்கின்றனர்.














