அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிஎன்என் ஊடகம், அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் குறித்த சிறப்பு செய்தியை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலையில் ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்கியது.
இதில் அமெரிக்க ராணுவ தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. 3 வீரர்கள் உயிரிழந்தனர். சீன உளவு செயற்கைக்கோள்களின் உதவியால் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களையும் சீன செயற்கைக்கோள்களின் உதவியுடன் ஈரான் ராணுவம் கண்காணித்து வருகிறது. இதன்மூலம் எதிரிகளின் கப்பல்கள் மீதும் அந்த நாடு மிகத் துல்லியமாக ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்துகிறது.
சீனாவின் உதவி இல்லாமல் ஈரான் ராணுவத்தால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை முடக்க சீனா விரும்பியது. இதன்மூலம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவும் சீனா வியூகம் வகுத்தது. ஈரான் ட்ரோன்கள் துல்லியமாக தாக்குதல் நடத்த சீன தரப்பில் சிறப்பு கருவிகள் வழங்கப்பட்டன. ரஷ்யாவும் ஈரானுக்கு உதவி செய்துள்ளது.
இரு நாடுகளின் நேரடி, மறைமுக உதவிகளால் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக ஈரானால் போரிட முடிந்தது. ஆனால் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவை நேரடியாக கண்டிக்கவில்லை. இவ்வாறு சிஎன்என் ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் ராணுவத்தின் முதுகெலும்பாக ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளன. இவற்றை தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சீனாவில் இருந்து 1,300 முறை விமானங்கள், கப்பல்கள் மூலம் உதிரி பாகங்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஜிபிஎஸ் கருவிகள், விமான இன்ஜின்கள், மோட்டார்களும் சீனாவில் இருந்து ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














