“9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன்” – ட்ரம்ப் பெருமிதம்

0
173

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தற்காலிக அமைதி நீண்ட காலப் போர்நிறுத்தத்துக்கான தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ரஷ்யாவில் கொண்டாடப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்குப் போர்நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தப் போரில் உக்ரைனுக்கும் முக்கியப் பங்கு இருந்ததைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், தனது நேரடி வேண்டுகோளை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இந்த மூன்று நாள் போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக் கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் குறித்து கவலை தெரிவித்த ட்ரம்ப், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனித உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்ட மிக மோசமான போர் இது. இந்தப் போரில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் இளம் வீரர்கள் கொல்லப்படுகின்றனர். நான் ஏற்கனவே எட்டு அல்லது ஒன்பது போர்களைத் தீர்த்து வைத்துள்ளேன். இந்தப் போரை நான் முடிவுக்குக் கொண்டுவரும் பத்தாவது போராகப் பார்க்க விரும்புகிறேன்” என்று ட்ரம்ப் கூறினார். 

இந்த மூன்று நாள் போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க தான் விரும்புவதாகவும், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here