கர்நாடக பாஜக ஆட்சிக்கு எதிரான 40 சதவீத கமிஷன் புகார்: சிஐடி விசாரணைக்கு உத்தரவு

0
37

கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியின் போது ஒப்பந்ததாரர் சங்கத்தினர் தெரிவித்த 40 சதவீத கமிஷன் புகார் மீது சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீதான பாஜக அரசு மீது அம்மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் புகாரை தெரிவித்தனர். அதாவது அரசின் ஒப்பந்த பணிகளை ஒதுக்குவதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் 40 சதவீதத்தை கமிஷனாக கேட்பதாக குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த சங்கத்தினர் கடிதம் எழுதினர். இந்த சூழலில் பெலகாவியை சேர்ந்த‌ ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை கொண்டதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் சித்தராமையா, இந்த புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். இந்த ஆணையம் 14 மாதங்கள் விசாரித்த பின்னர், 40 சதவீத கமிஷன் புகாருக்கு ஆதாரம் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று முன் தினம் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், “பாஜக அரசின் மீது கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்த 40 சதவீத கமிஷன் புகார் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி நாகமோகன் தாஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். பாஜக ஆட்சியில் போடப்பட்ட 1729 ஒப்பந்த திட்ட பணிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். சிறப்பு புலனாய்வு போலீஸார் குழு, நீதிபதி குழுவின் 20 ஆயிரம் பக்க‌ அறிக்கையை ஆராயும். 2 மாத கால அவகாசத்துக்குள் சிஐடி போலீஸார் இதுகுறித்து அறிக்கை அளிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here