தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பிபி பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சாய்குமார் மற்றும் அதே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய ஸ்ருதி மற்றும் ஒரு கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றும் நிகில் ஆகிய 3 பேரின் செல்போன்களும் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆனதால், அவரவர் வீடுகள் சில மணி நேரம் தேடினர்.
அதன் பின்னர் இது குறித்து பிபி பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காமாரெட்டி மாவட்ட எஸ்பி சிந்து ஷர்மா இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார். இந்நிலையில், புதன்கிழமை இரவு சதாசிவநகர் அட்லூரு எல்லாரெட்டி ஏரியில் ஸ்ருதி மற்றும் நிகில் ஆகியோரின் செருப்புகளும், செல்போனும் இருப்பதை கண்டு அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்குள் போலீஸாரும் செல்போன் காட்டும் சிக்னலின் அடிப்படையில் அங்கு வந்து சேர்ந்தனர்.
அதன் பின்னர், தீயணைப்பு படையினர் உதவியுடன் இவர்களை தேடும்பணி நடந்தது. அப்போது ஸ்ருதி மற்றும் நிகில் ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், அதே ஏரியில் நேற்று போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாய்குமாரும் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.