தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகர்கோவில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி தந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் 14 பேருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தங்கள் கட்சியில் சேர்த்துள்ளது பா.ஜ.க.
இந்தியாவிலே பா.ஜ.க.வில்தான் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் உறுப்பினர்களாக அதிகம் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில் தான், இன்றைக்கு போதைப்பொருள் நடமாட்டம் என்பது அதிகமாக உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் உடந்தையாக இருந்துவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர் தான் மோடி பார்முலாவா? என கேட்க விரும்புகிறோம்.
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயிரிடப்படுவதாகத் தகவல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல, தமிழ்நாட்டு மக்கள் மீது தேர்தலுக்காக பழி போடுவதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
2019-ல் 11,418 கிலோ, 2020-ல் 15,144 கிலோ, 2021-ல் 20,431 கிலோ, 2022-ல் 28,381 கிலோ, 2023-ல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2022-ல் 2,016 வழக்குகள் போடப்பட்டதில் 1,916 வழக்குகள் அதாவது 80 சதவீத வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 418 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.
2023-ல் 3,567 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2,988 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது, 579 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.
தமிழ்நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தண்டனை பெற்றுத்தருவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. வருங்கால சந்ததியினரைப் பாழாக்கிவிடும் என்பதால் போதைப்பொருட்களைத் தடுப்பதற்கு முழுக் கவனம், முழு சக்தியையும் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
பா.ஜனதாவைச் சேர்ந்த சரவணன், குமார் என்ற குணசீலன், மணிகண்டன், சத்யா என்ற சத்யராஜ், சென்னை 109-வது வட்ட தலைவர் ராஜேஷ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய நாராயணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் மணிகண்டன்,
திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர் ராஜா,பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் லிவிங்கோ அடைக்கலராஜ்,
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சிதம்பரம் என்ற குட்டி, விவசாய பிரிவு மாநிலச்செயலாளர் ராஜா, மதுரை நகர இளைஞர் பிரிவு செயலாளர் காசிராஜன் ஆகிய 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பாக 23 வழக்குகள் உள்ளது.
அண்ணாமலை பா.ஜ.க.வில் உள்ளவர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும். அதே போல் குஜராத்திலும் தடுக்கட்டும். பா.ஜனதா ஆளும் பிற மாநிலங்களிலும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கட்டும். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவதை பார்க்கட்டும்.
போதைப்பொருள் கடத்துவது குறித்து தி.மு.க.விற்குத் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எங்களுடைய நோக்கம் அதைத் தடுக்கவேண்டும் என்பதுதான். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
தி.மு.க.வில் இருக்கும் உறுப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறோம். குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.விற்கு என்றும் கிடையாது.
இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இல்லம் தேடி குட்கா என பேசியுள்ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டு பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.