விஜய் ஆண்டனி, ரியா சுமன் நடித்துள்ள படம் ‘ஹிட்லர்’. சரண்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, இயக்குநர் தமிழ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரித்துள்ளனர்.
வரும் 27-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் தனா கூறும்போது, “இது ஆக் ஷன் படம். ஒரு பக்கம் விஜய் ஆண்டனி, இன்னொரு பக்கம் கவுதம் மேனன். இருவரையும் இயக்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அவர்கள் தந்த ஒத்துழைப்பில் தான், இந்தக் கதையை சிறப்பாகச் செய்தேன். அனைவருக்கும் பிடிக்கும் மிரட்டலான கமர்ஷியல் ஆக் ஷன் படமாக இது இருக்கும்” என்றார்.விஜய் ஆண்டனி பேசும்போது, “கவுதம் மேனன் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. 2005-ம் ஆண்டு அவரை சந்திக்கவும் அவர் படத்தில் இசையமைக்கவும் வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச்சிறந்த இயக்குநர். படத்தை அற்புதமாக எடுத்துள்ளார்” என்றார்.