நகராட்சி நிர்வாக துறை போட்டி தேர்வில் குளறுபடி நடந்ததாக தேர்வர்கள் புகார்

0
54

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளில்2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டது

இந்நிலையில், வினாத்தாள்களின் உறைகள் மற்றும் வினாத்தாள்களில் சீல் பிரிக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் தேர்வர்களுக்கும், மையப் பொறுப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இதுகுறித்து போட்டித் தேர்வர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில், ஒவ்வொரு அறையிலும் எத்தனை தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருக் கிறார்களோ, அவர்களுக்கான கேள்வித்தாள்கள் அனைத்தும் சீலிடப்பட்ட ஒரே உறையில் வைக்கப்பட்டிருக்கும்.

தேர்வறையில் தேர்வர்கள் முன்னிலையில் மட்டுமே சீல் உடைக்கப்பட்டு, தேர்வுத் தாள்கள் விநியோகம் செய்யப்படும்.

தேர்வுத்தாள் கசிவை தடுப்பதற்காகவும், தேர்வு நடுநிலையோடு நடைபெறுகிறது என்ற நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் தேர்வறையில் 25 பேர்தேர்வு எழுதினோம். கேள்வித்தாள்களை பத்து, பத்தாகப் பிரித்து தனித்தனி சீலிடப்பட்ட உறைகளில் வைத்திருந்தனர். எங்கள் அறையில் 2 உறைகளை எங்கள் முன்னிலையில் சீல் அகற்றி பிரித்து,கேள்வித்தாள்களை விநியோகம்செய்தனர். மற்ற 5 பேருக்கான கேள்வித்தாள்களை உதிரிகளாகக் கொண்டு வந்து விநியோகம்செய்தனர். தலா 10 கேள்வித்தாள்கள் கொண்ட உறைகளாக பிரித்து வைத்ததே பிரச்னைக்கு காரணம். இதனாலேயே கேள்வித்தாள் கசிந்திருக்கக்கூடும் என்றசந்தேகம் எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்பாளர்களிடம் கேட்டபோது முறையான பதில் வழங்கப்படவில்லை.

குறிப்பாக, பொறியாளர் பணித்தேர்வை இதற்கு முன்னர் டிஎன்பிஎஸ்சியே நடத்தி வந்தது. ஆனால், திடீரென நகராட்சித் துறையே தேர்வை நடத்த முன்வந்ததற்கான காரணம் புரியவில்லை.

மேலும், சில மையங்களில் விடைகளை மையிட்டு அடையாளப்படுத்தும் ஓஎம்ஆர் தாளில் பாட வரிசை எண்ணை குறிப்பிட வேண்டும். உதாரணமாக, பாட வரிசை எண் 301 எனில், இந்த 3 எண்களையும் குறிக்கும் வட்டங்களை மையால் நிரப்ப வேண்டும். ஆனால் அந்த தாளில் பூஜ்யத்தை நிரப்புவதற்கான வரிசை இல்லை. இதனால் ஓஎம்ஆர் தாள் கணினி வழியாக சரியாக மதிப்பீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இவை தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முற்றிலும் தவறான தகவல்: இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் கேட்டபோது, “கிராமப்புற மாணவரும் தேர்வில் வெற்றிபெறும் நோக்கிலும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதற்காகவும் இந்தப் பணி அண்ணா பல்கலை.யிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் தேர்வு நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டனர். கேள்வித்தாள்கள் தொகுப்பு,அனைத்து தேர்வு மையங்களுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதை பிரித்துக் கொடுக்கும்போது, கேள்வித்தாளில் ஒட்டப்பட்டிருந்த டேப் லேசாக கிழிந்துள்ளது. எந்த முறைகேடும் நடைபெறவில்லை. 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முறைகேடு நடந்திருக்கலாம் என்று கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல்” என்றார்.