மகாவிஷ்ணு அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான ஆவணி மாதம் அஷ்டமி தினத்தைப் பக்தர்கள் கோகுலாஷ்டமி தினமாகக் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு இந்துக்கள் அனைவரும் வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவர்.
மேலும் குழந்தைகளுக்குக் கிருஷ்ணர் ராதா வேடமிட்டு கோவில்களுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்துவர் சில இடங்களில் உறியடி திருவிழாவும் நடக்கும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மாநில அளவிலான மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதனைத் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.மாட்டுவண்டி போட்டிகள் வில்வண்டி மற்றும் தட்டு வண்டி போட்டிகளாக நடைபெற்றது. இதில் வில்வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் பரிசும், தட்டு வண்டி போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.