ஜார்க்கண்டில் மேலும் 9 பேருக்கு மூளையை தாக்கும் மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள போட்கா பகுதியில் கொசுக்களால் ஏற்படும் ‘செரிப்ரல் மலேரியா’ (மூளையை தாக்கும் மலேரியா) பரவி வருகிறது. கடந்த வாரம் இந்த நோய் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து, இதுவரை 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில் “போட்கா பகுதியில் மேலும் 9 பேருக்கு செரிப்ரல் மலேரியா புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் போட்கா பகுதியில் மொத்தம் 3,000 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
செரிப்ரல் மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium Falciparum) தொற்று காரணமாக ஏற்படும் உயிருக்கு ஆபத்தான ஒரு நரம்பியல் பாதிப்பாகும். இது நோயாளி கோமா நிலைக்கு செல்லவும், கடுமையான மூளை பாதிப்பு ஏற்படவும் வழிவகுக்கிறது. இந்த நோய் பாதிப்பு பெரும்பாலும் கந்தார், ஹித்பாசா ஆகிய கிராமங்களில் பதிவாகியுள்ளது. அங்கு மருத்துவக் குழுக்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
மருந்துகள், கொசு வலைகளை வழங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். செரிப்ரல் மலேரியாவால் பாதிக்கப்பட்ட 9 நோயாளிகள் போட்கா பகுதியில் உள்ள மருத்துவமனையிலும், 45 பேர் ஜாம்ஷெட்பூரில் உள்ள சதர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.















