“பிஹாரில் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தியது ஏன்?” – பிரதமருக்கு ராகுல் கேள்வி

0
16

“டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களை தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், மாணவர்கள் மீது அல்ல” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக அப்பட்டமான கொலைவெறியைக் கொண்டுள்ளது.

பிஹாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே-47 ரக துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படாது, அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது பிரதமரே?. மாணவர்கள் மீது கொடிய தாக்குதல்களும் மிருகத்தனமும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பிஹாரில் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் சுடப்பட்டன. அது உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார், டெல்லி என எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.

நான் முன்பே கூறியுள்ளேன். இந்த அரசாங்கம் நேர்மையற்றது. உண்மையான சீர்திருத்தம் செய்வது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் தங்கள் வார்த்தைகளிலிருந்து பின்வாங்கி, மாணவர்களின் குரல்களை அடக்க எல்லா தந்திரங்களையும் பயன்படுத்துவார்கள்.

பிரதமர் மோடி, நாட்டின் மாணவர்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள். மேலும், மாணவர்களைத் தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், மாணவர்கள் மீது அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here